உணர்தல்-தமிழச்சி தங்கப்பாண்டியன்

ச்சியில் தரும்

🌳🌧💃

ஒரு துளி முத்தத்தில்
உயிர்வரை நனைத்து
உடலோடு கிளைபரப்பி
உள்மன வெளியோடித் தழுவி
என் உணர்வுத்தண்டின்
குறுவடத்தைப்
பதியமாய்த் தன்னில் வாங்கிப்
பின் பாதத்தில்
வேர் பதிக்கும்
பெரு விருட்சமாய்
யார் நீ?

இமைப்பீலி பிரித்து
இருவிழி கரித்து
இதழ்ச்சுவை உணர்ந்து
கன்னக்குழியில்
கணம் தடுமாறிச்
செவிமடல் சீண்டிச்
சிலிர்க்கும் நரம்புயாழ்
கூட்டிக்

கழுத்து வளைவில்
தாமதித்துப்
பின் தறிகெடும்
என் தேக ரகசியம்
முழுதும் தேடி
அறியும் திருட்டுக்
காதலனாய்
யார் நீ?

வறண்ட காலடித்
தடங்களோடு
தனிமை தகிக்கின்றதொரு
கோடைகாலத்து
மதியப் பொழுதில்
அது நீயென
முற்றிலுமாய்
நான் மூழ்கி உணர்வேன்
என் செல்ல மழையே