மௌனம்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்

Maunam-Thamizhachi Thangapandian.

இயற்கையெனும்

எழுது பொருளில்
இன்று மரங்களைப் பற்றிய கவிதை என
அறிவிக்கப்படுகிறது
அந்தக் கவியரங்கில்

இளம் பெண்ணொருத்தியின்
முதல் முத்தமாய்
உன் வசந்தகாலத் துளிரைப்
போகி வர்ணிக்கிறான்

எங்குமிருக்கின்ற பெருஞ்சூன்யத்தில்
ஓர் உட்சூன்யமாய்
உன் இலையுதிர் கால
வெறுமையினை
யோகி தரிசிக்கின்றான்

உள்ளும் புறமும் தகித்து
ஒடுங்கும் உலர்தலாய்
உன் கோடையின் வெம்மையை
ரோகி உருவகிக்கிறான்

விதைக்குள் மூச்சடக்கி
பெருவெளிக்குள்
உயிர் விரிக்கும்
பிரணாயாமப் பெருவித்தைக்காரனாய்
உனை ஞானி உணர்கிறான்

கரும்பச்சை இலை
இளஞ்சிவப்பாய் மாறுகின்ற
உன் கணநேர ரசவாதம்
புரியாமல் தடுமாறும் நானோ

படிமங்களின் ஆடைகளற்ற
உன் நிர்வாணத்தை
வார்த்தையெனும்
ஏவாளின் ஆப்பிள்
மூடாதிருக்கட்டும்
எனும் பிராத்தனையுடன்
பேசாதிருக்கிறேன்
மிகச்
சாமான்யமானவனா(ளா)ய்

...